அது ஓர் அதலபாதாள வீழ்ச்சி!

நாற்காலிக்கனவுகள்
காமராஜர்
காமராஜர்
Published on

1967 ல் தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வியை debacle,  சர்வ நாசம், படுவீழ்ச்சி என்று ஆங்கில நாளிதழ்கள் தலைப்புப் போட்டன. உண்மைதான்.

காங்கிரஸுக்கு அது ஓர் அதல பாதாள வீழ்ச்சியே. அகில இந்திய அளவில் நிமிர்ந்து நின்ற கட்சியின் மிக முக்கியமான ஆணிவேர் துண்டிக்கப் பட்டுவிட்டது. எண்ணிப்பாருங்கள், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு தமிழர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் புகழ்பெற்றிருக்கும் சமயம், இரண்டு பிரதமர்களை சாமர்த்தியமான முறையில் தேர்ந்தெடுத்து உலக அரங்கில் காமராஜர் என்கிற பெயர் ஆச்சரியமாகக் கவனிக்கப்பட்ட நேரம். சோவியத் ரஷ்யா அவரைக் கௌரவித்தது. அமெரிக்கா அழைத் தது. ஒரு காலத்தில் காமராஜர் பேசும் கூட்டங்களுக்கு மக்கள் சேரமாட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் காமராஜருக்குப் பெரும் கூட்டம் கூடியது. அவரும் தங்குதடையின்றி கம்பீரமாகப் பேச ஆரம்பித்தார். சூழ்நிலைகள் மாபெரும் வெற்றிக்குச் சாதகமாக இருப்பதுபோல் தோன்றியது! அது மாயத் தோற்றம் ஆயிற்று! காங்கிரஸ் தமிழ்நாட்டில் தூக்கி எறியப்பட்டது. காமராஜரே தோற்றார்! 

அதன் காரணம் ஆராயத்தக்கது. காரணம் விசித்திரமாகவும் இருக்கலாம்! காங்கிரஸ் தமிழ்நாட்டில் செய்த சாதனைகளை வைத்து படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்றார் காமராஜர்! அவரது முக்கிய எதிரியாக அன்று திகழ்ந்த ராஜாஜி,  ‘‘படுப்பது நிச்சயம், ஜெயிப்பது கிடையாது!'' என்றார்.

காமராஜர் நிஜமாகவே விபத்தில் சிக்கி காலில் அடிபட்டுப் படுத்துவிட்டார். மறுபடியும் தலைதூக்க முடியாத அளவுக்கு ஏற்பட்ட தோல்வி ஏன்? எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஓரணியில் திரண்டதுதான் காரணமா?

காமராஜர் முதலமைச்சர் பதவி யிலிருந்து விலகி, பக்தவத்சலத்திடம் ஆட்சி போயிற்று. பக்தவத்சலம் சிறந்த நிர்வாகி, தேச பக்தர்! அதுவேறு.. காமராஜர் போன்று சாமானிய மக்கள் மனத்தைப் புரிந்துகொண்டவரா என்றால்....? அதனால்தான் காமராஜர் பதவி விலகியதையோ, அகில இந்திய அரசியலுக்குச் செல்வதையோ பெரியார் ஈ.வே.ரா ஆதரிக்கவில்லை. அது தமிழ்நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நல்லதல்ல என்ற அவர் கருத்தே உண்மை ஆனது!

காங்கிரஸ் தோல்விக்கு 1965 - ல் நடந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் அதை விபரீதமாகச் சமாளித்த பக்தவத்சலம் ஆட்சியும் ஒரு காரணம் எனப்படுகிறது. அதோடு திடீரென பூதாகரமாகக் கிளம்பிய அரிசிப் பஞ்சம்! அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்தது! ஐம்பது பைசாவிலிருந்து படி 2 ரூபாய் என ஆனது அன்று அதிர்ச்சி அளித்த செய்தி. அதுவும் கிடைக் கவில்லை! தமிழர்கள் கோதுமை உணவை கட்டாயமாக சேர்த்துக்கொள்ளும் நிலை! ஆனால் உணவுப் பஞ்சமே இல்லை என்று பக்தவத்சலம் சாதித்தார். ரேஷன் கடையில் பெரும் வரிசையாக நின்ற மக்கள், ஆத்திரத்தோடு ஓட்டுச் சாவடிக்குத் திரண்டால் என்ன நடக்கும்?

 1967 - தேர்தல் பிரச்சாரத்தில் வியப்பூட்டும் காட்சிகள் நடந்தன. மிக முக்கியமாக நடுத்தர வர்க்கக் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிக்கொண்டு எதிர்க்கட்சியின் பேச்சுகளைக் கேட்கத்திரண்டனர். முடிவும் அப்போதே தெரிந்துவிட்டது. இந்த தேர்தல் முடிவை ஆராய்ந்தால், காமராஜர் செல்வாக்கு மிக உயர்ந்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் தமிழக காங்கிரஸ் மீது சில ஆண்டுகளாகவே கொஞ்சம் கொஞ்சமாக அதிருப்தி அதிகமாகிக் கொண்டிருந்ததை கட்சி புரிந்து கொள்ளவில்லை என்பதும் தெரியும். அடுத்த தலைமுறையின் ஆதரவை இழந்து கொண்டிருந்தது புரியும். முக்கியமாக தமிழர்களிடையே உள்ள தனிக் குணங்களை காங்கிரஸ் கட்சி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

மொழிவழி மாகாணங்கள் அடைந்த பிறகும் தமிழ் உணர்வு அரசினால் போற்றப்படவில்லை என்பது காங்கிரஸ் மீது மக்களுக்கு உள்ள பற்று குறைந்து வந்ததற்கு ஓர் அடிப்படை காரணம். ஏனெனில் அந்த காலகட்டத்தில் இளைஞர்களிடையே தமிழுணர்வு எழுச்சி பெற்று வந்தது. ‘தமிழ்நாடு' என்று பெயர் வைக்க காங்கிரஸ் ஆட்சி மறுத்தது. தமிழ்நாடு என்ற பெயர் இலக்கியத்தில் இல்லை; என்று சொல்லி சர்ச்சைக்கு ஆளானார்கள். ‘‘தமிழ் சோறு போடுமா'' என்றார்கள்.

நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்டை வளப்படுத்திய ஆட்சி காமராஜருடையது.  தேசிய சிந்தனை அவரை ஆட்கொண்டிருந்தது. அதில் தமிழ் உணர்வும் அடங்கும் என்பது அவர் கருத்தாக இருந்திருக்கலாம்! ஆனால் காங்கிரஸில் பலர் தமிழ் உணர்வை புரிந்து கொண்டிருந்தார்கள். ஆட்சி நிலைக்க தமிழ் உணர்வு மதிக்கப்படவேண்டும் என்று கருதியவர் சி.சுப்ரமணியம். அவர் பாரதிக்கு விழா எடுத்தார். சிலப்பதிகார விழா எடுத்தார். திருவள்ளுவருக்கு, எல்லா கட்சியினரின் ஒப்புதல் பெற்று உருவசிலை அமைத்தார். தமிழால் முடியும் என்று கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்விக்கு வழி வகுத்தார். தமிழரசு கட்சியின் தலைவர் ம.பொசியுடன் நட்புடன் இருந்தார்.  காங்கிரஸை விட்டு வெளியேறினாலும் தேர்தலில் காங்கிரசை ஆதரித்துவந்தவரான ம.பொ.சி. 1967ல் அண்ணா, ராஜாஜி கூட்டணியில் சேர்ந்துவிட்டார். 

சி.எஸ். முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. தமிழர் எல்லோருக்கும் தமிழ் உணர்வு என்பது இயற்கையாக இருக்கும். அதை எதற்கு தம்பட்டம் அடிக்கணும் என்பது காமராஜ் கருத்து. இந்தித் திணிப்பு வந்தபோது ‘‘அது எப்படி திணிக்க முடியும்? இந்தியில் மத்திய அரசு உத்தரவு போட்டால்  அதை குப்பையில் தூக்கி எறிவேன்'' என்று சொன்னவர் காமராஜ். ஆனால் அன்று சுனாமி போல பெருகிவந்த தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு எல்லாம் சேர்ந்து காங்கிரஸை தமிழகத்தில் பதவியிலிருந்து இறக்கிவிட்டது எனலாம்! ஒரு வேளை காமராஜ் முதல்வராக நீடித்திருந்தால் இது நடக்காமல் போயிருக்கலாம்.

இன்னொரு விஷயம் ‘இந்த சுனாமி எதிர்ப்பை' அறிஞர் அண்ணாவே எதிர்பார்க்கவில்லை. நாம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக பல திமுக தலைவர்கள் சொன்னபோது அறிஞர் அண்ணா அதற்கு முக்கியத்துவம் தரவில்லை.  இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்குப் பின் நடந்த தர்மபுரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அண்ணா சுட்டிக்காட்டி, மக்கள் மனம் மாறியிருப்பதாக ஒரேயடியாகக் கருத முடியாது என்று கூறினார். 

அதனால்தான் அவர் 1967 -ல் நாடாளுமன்ற தேர்தலில் நின்றார். தி.மு.க மாபெறும் வெற்றி பெற்றபோதுகூட அண்ணா திகைப்போடுதான் இருந்தார். சொல்லப்போனால் 1967 தேர்தல் பற்றி முழு அரசியல் ஆய்வு ஒன்று தேவையே! காமராஜ் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், அகில இந்திய அரசியலில் அவர் செல்வாக்கு இன்னும் உயர்ந்திருக்கும். அதை தடைப்படுத்த பின்னணியில் ஏதாவது நடந்ததா? தமிழ் உணர்வு என்பது ஒரு ‘சாக்கு' தானா? எல்லாமே ஆராய நிறைய விஷயம் இருக்கிறது.

ஏப்ரல், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com